Tamilசெய்திகள்

பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்! – மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி

சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 15 மாடிகள் கொண்ட நவீன புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்காக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.76 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி நில மாற்றம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தற்போதைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் நிலவும் கடும் இடநெருக்கடி மற்றும் நிர்வாகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும், பட்டினப்பாக்கம், சாந்தோம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பல முக்கிய பள்ளிகள் அமைந்த நெருக்கடியான மண்டலமாக விளங்குவதால், இங்கு புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

மேலும், இத்திட்டத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த 9 மீனவக் குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அரசின் இந்த அரசாணை பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் மீனவ அமைப்புகள் என பல தரப்பிலும் பெரும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.