Tamilசெய்திகள்

விளம்பரம் தேடும் போக்கை விட்டுவிட்டு மின்தடை இன்னல்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை மின் மயானத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மறைந்த தந்தையின் உடலைத் தகனம் செய்ய முடியாமல் தவித்த மகன் தனது சொந்தச் செலவில் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து வந்து தகனம் செய்த நிலையில், தாங்களே ஜெனரேட்டர் ஏற்பாடு செய்ததாகப் பொய்யான விளம்பரம் தேடிய எரிசக்தித் துறை அமைச்சருக்கும் தவெக அரசுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு, மின்கணக்கீட்டில் குளறுபடி, மறைமுக மின்கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத மின்வெட்டு எனத் திறனற்ற நிர்வாகத்தால் எரிசக்தித் துறையைப் படுகுழியில் தள்ளிவிட்டு வெறும் வாய்ச்சவடால் பேசி வரும் அமைச்சரிடம் சட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைகளையும் ஒப்படைத்திருப்பது முதல்வர் சோசப் விஜய்யின் நிர்வாகத் திறனையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

உடலைத் தகனம் செய்ய வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வர வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பிய அவர், துயரத்திலும் விளம்பரம் தேடும் போக்கை விட்டுவிட்டு மின்தடை இன்னல்களுக்கு உடனடியாகத் தீர்வு காண முதல்வர் விஜய் நேரடிக் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.