Tamilசெய்திகள்

தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே, வரலாற்றை மாற்றக் கூடாது – திமுக வலியுறுத்தல்

தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே என்றும், வரலாற்றை மாற்றக் கூடாது என்றும் தி.மு.க. வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1956 நவம்பர் 1-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு அமலுக்கு வந்து எல்லைகள் வரையறுக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஐ ‘எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்’ என நினைவு கூர்வதே பொருத்தமானது என்றும், அதைத் ‘தமிழ்நாடு நாள்’ எனக் குறிப்பிடுவது மாநிலத்தின் தனித்துவத்தை மழுங்கடிக்கும் செயல் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றக் கோரி தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகத்தையும், ம.பொ.சி உள்ளிட்ட தமிழறிஞர்களின் போராட்டத்தையும் தொடர்ந்து, 1967 ஜூலை 18-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்தே 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த வரலாற்றைக் சுட்டிக்காட்டி, தமிழறிஞர்களின் கோரிக்கையை ஏற்று 2021-இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 18-ஐ ‘தமிழ்நாடு நாள்’ ஆக அறிவித்து, நவம்பர் 1-ஐ எல்லைப் போராட்ட தியாகிகள் நாளாகக் கௌரவித்தார்.

எனவே, நவம்பர் 1 என்பது மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாளாகவும், ஜூலை 18 என்பது தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு மற்றும் அரசியல் அடையாளத்தைப் போற்றும் ‘தமிழ்நாடு நாள்’ ஆகவும் நிலைநிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.