Tamilசெய்திகள்

திருவண்ணாமலை தங்க ரிஷப வாகனத்தின் ஷூ காலோடு ஏறிய விவகாரம் – கோயில் நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வருகிற நவம்பர் 15-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாக் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், கோயிலின் 9 கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணி கடந்த நவம்பர் 3-ஆம் தேதி தீயணைப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு தலைமையில், திருவண்ணாமலை தீயணைப்பு அலுவலர் பழனிச்சாமி மேற்பார்வையில் நடைபெற்ற இந்தச் சுத்திகரிப்புப் பணியின் போது, பாதுகாப்பான ஏணி அல்லது ஹைட்ராலிக் லேடரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகச் சுவாமி வீதி உலா வரும் புனிதமிக்க தங்க ரிஷப வாகனத்தை இழுத்து வந்து அதன் மீது ஷூ மற்றும் செருப்புகளுடன் தீயணைப்பு வீரர்கள் ஏறி நின்று தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவபெருமானின் வாகனமாகவும் தர்மத்தின் அடையாளமாகவும் விளங்கும் ரிஷப வாகனமானது தெய்வத்திற்குச் சமமாகவும், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் புனிதமானதாகவும் ஆகம விதிகளால் மதிக்கப்படும் நிலையில், அதன் மீது செருப்புடன் ஏறியது மகாபாவம் மற்றும் தீட்டு என்று கூறி பக்தர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, வாகனத்தை எடுத்துக்கொடுத்த கோயில் ஊழியர் அசோக் என்பவர் உடனடியாகத் தற்காலிகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். மேலும், திருமஞ்சன கோபுரத்தில் ஒட்டியிருந்த புறா எச்சத்தைச் சுத்தம் செய்ய வேறு வழியின்றி ரிஷப வாகனத்தைப் பயன்படுத்தியது தவறு தான் என்றும் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் குறிப்பிட்டுத் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி கோயில் நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கடிதம் வழங்கியுள்ளார்.

கோபுரங்களைச் சுத்தம் செய்யும் நல்ல காரியத்திற்காகத் தெய்வத்தின் புனித வாகனத்தை ஏணியாகப் பயன்படுத்திய இந்தச் செயல் ஆகம விதி மீறல் மட்டுமல்லாமல் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் செயலாக உள்ளதால், கோயில் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.