கிரீன் எஸ்.எம் மின்சார டாக்ஸி சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம்!
வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘கிரீன் எஸ்எம்’ (Green SM) என்ற புதிய மின்சார டாக்ஸி சேவையின் இந்திய வருகையால், உள்நாட்டு கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் கலக்கமடைந்து போராட்டங்களில் குதித்துள்ளனர்.
ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாகக் களமிறங்கியுள்ள இந்த நிறுவனம், கிலோமீட்டருக்கு வெறும் 8 ரூபாய் என்ற மிகக் குறைந்த கட்டணத்தையும், நெரிசல் நேரங்களில் கூடுதல் கட்டணம் (Surge pricing) இல்லாத சேவையையும் அறிவித்திருப்பது தற்போதைய டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
முழுக்க முழுக்க 7 இருக்கைகள் கொண்ட ‘வின்ஃபாஸ்ட் லிமோ கிரீன்’ மின்சார சொகுசு கார்களைத் தனது சொந்தக் கட்டுப்பாட்டில் இயக்கும் இந்நிறுவனம், ஓட்டுநர்களுக்கு 35,000 முதல் 60,000 ரூபாய் வரை மாதச் சம்பளம் வழங்குவதோடு, பயணிகளுக்கு இலவசக் குடிநீர் மற்றும் ஏஐ பாதுகாப்பு வசதிகளையும் வழங்குகிறது.
ஏற்கனவே டெல்லி-என்சிஆர், ஹைதராபாத் மற்றும் சென்னையின் சில பகுதிகளில் கால் பதித்துள்ள கிரீன் எஸ்எம், அண்மையில் கர்நாடக போக்குவரத்துத் துறையின் உரிமத்தைப் பெற்று வரும் டிசம்பர் மாதம் பெங்களூருவிலும் தனது சேவையைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
குறைந்த கட்டணப் போட்டியால் தங்களது வருமானம் முற்றிலும் முடங்கிவிடும் என அஞ்சும் உள்ளூர் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்நிறுவனத்திற்குத் தடை விதிக்கக் கோரித் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருவது இந்திய போக்குவரத்துத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
