Tamilசெய்திகள்

வாரணாசியில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் தேவ தீபாவளி திருவிழா!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கார்த்திகை பௌர்ணமியையொட்டி தேவ தீபாவளி (Dev Deepawali) திருவிழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கங்கை நதிக்கரையில் உள்ள 84 படித்துறைகளும் (Ghats) சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மண் விளக்குகளால் ஒளிவெள்ளத்தில் மிளிரத் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதனுடன் பல்வேறு குழுக்கள் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டுக் கங்கைக் கரை முழுவதும் தீப ஒளியால் காட்சியளிக்கிறது.

மாலை வேளையில் 51 படித்துறைகளில் கங்கை ஆரத்தி (Ganga Aarti) நடைபெறுவதுடன், தசாஸ்வமேத படித்துறையில் மகா ஆரத்தியும் விமரிசையாக நடைபெறுகிறது. நவீன தொழில்நுட்பக் காட்சிகளாகச் சேத் சிங் படித்துறை பகுதியில் 3டி மேப்பிங் (3D Mapping) மற்றும் லேசர் காட்சி (Laser Show) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கங்கை நதிக்கரையின் எதிர் கரைப் பகுதியில் சுமார் 2,100 உள்நாட்டு ட்ரோன்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட ட்ரோன் காட்சியும் (Drone Show), பசுமை வாணவேடிக்கை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன; லட்சக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வாரணாசியில் குவிந்துள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.