Tamilசெய்திகள்

நீதிபதிகளைப் போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட முடியாது – தொல்.திருமாவளவன்

உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது பகிர்வில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நீதிபதிகளைப் போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட முடியாது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆவணங்கள், ஆதாரங்கள், சான்றுகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்கு மட்டுமே உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது என்றும், மாநில அரசின் நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டே அவர்கள் செயல்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு எனக் கூறியுள்ள திருமாவளவன், மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்திற்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.