Tamilசினிமாதிரை விமர்சனம்

ராக்கி- திரைப்பட விமர்சனம்

கே.சி.பொக்காடியா இயக்கத்தில், ஸ்ரீகாந்த், ஈஷான்யா மகேஸ்வரி, நாசர், ஷாயாஜி சிண்டே ஆகியோருடன் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ராக்கி’ எப்படி என்பதை பார்ப்போம்.

போலீஸ் அதிகாரியான ஸ்ரீகாந்த், சாலையில் அடிபட்டு கிடக்கும் குட்டி நாய் ஒன்றை எடுத்து காப்பாற்றி அதை வளர்க்கிறார். பிறகு அந்த நாயை காவல் துறை நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் மையத்தில் சேர்த்து பயிற்சியும் கொடுக்கிறார். இதற்கிடையே, ஸ்ரீகாந்த் கைது செய்து சிறையில் அடைத்த பயங்கர குற்றவாளி ஒருவனை, ஸ்ரீகாந்துக்கு கீழே இருக்கும் காவல் துறை அதிகாரிகள் தப்பிக்க வைத்துவிட, அந்த குற்றவாளி இருக்கும் இடத்தை ஸ்ரீகாந்தின் நாய் கண்டுபிடிப்பதோடு, அந்த இடத்திற்கு ஸ்ரீகாந்தையும் அழைத்துச் செல்கிறது. குற்றவாளியை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையில் ஸ்ரீகாந்த் ஈடுபடும் போது, அவருடன் இருக்கும் போலீஸ்காரர்களே அவரை கொலை செய்துவிடுகிறார்கள்.

ஸ்ரீகாந்தை யார் கொலை செய்தார்கள் என்பது அவரது நாய்க்கு மட்டுமே தெரியும் என்பதால், அந்த நாயை கொலை செய்ய வில்லன் கோஷ்ட்டி முயற்சிக்க, மறுபக்கம் அந்த நாயை வைத்து குற்றவாளிகளை பிடிக்க காவல் துறை முயற்சிக்கிறது. இதற்கிடையே, தனது எஜமானரை கொலை செய்தவர்களை பழிவாங்க நேரடியாக களத்தில் இறங்கும் ராக்கி என்ற நாய், பயங்கரமான ஆயுதங்களுடனும், பாதுகாப்புடன் இருக்கும் கொலைகாரர்களை எப்படி பழிவாங்குகிறது, என்பது தான் படத்தின் மீதிக்கதை.

80 களில் டிரெண்ட்டாக இருந்த பழிவாங்கும், அதுவும் விலங்குகள் பழிவாங்கும் கதை தான் இந்த ‘ராக்கி’ படத்தின் கதை என்றாலும், அதை தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப கூட மாற்றாமல், அப்படியே பழமையோடு படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் ஹீரோ ஸ்ரீகாந்த் என்றாலும் நாய்க்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ராக்கி என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் சாகசங்களை நம்பி இப்படத்தை எடுத்திருக்கும் கே.சி.பொக்காடியா, ஒரு குறிப்பிட சில காட்சிகளை திரும்ப திரும்ப போட்டு, நாயின் சாகசத்தின் மீது சலிப்படைய செய்துவிடுகிறார்.

காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்திருக்கிறார். ஹீரோயின் ஈஷான்யா மகேஸ்வரி, நாசர், ஷாயஜி ஷிண்டே என்று படத்தில் நடித்த அனைவரும் தங்களது வேலையை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

30 க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை இயக்கி தயாரித்திருக்கும் கே.சி.பொக்காடியா, தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லியிருந்தாலும், பழைய விஷயத்தை, அதே பழமையான காட்சிகளோடு சொல்லியிருப்பது படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருக்கிறது.

பப்பி லஹரி, சரன் அர்ஜுன் ஆகியோரது இசையும், அஸ்மல் கானின் ஒளிப்பதிவும் கே.சி.பொக்காடியாவின் காட்சிகளைப் போலவே ரொம்ப பழசாகவே இருக்கிறது.

பழைய வெற்றிப் படங்களை தற்போதைய தொழில்நுட்ப காலக்கட்டத்திற்கு ஏற்ப ரீமேக் செய்து வரும் நிலையில், இயக்குநர் கே.சி.பொக்காடியா தனது பழைய வெற்றிப் படத்தை, நடிகர்களை மட்டுமே மாற்றி, அப்படியே மீண்டும் படமாக்கியிருப்பது போல தான் இந்த படம் இருக்கிறது.

நாயின் சாகசங்கள் சில இடங்களில் ரசிக்க வைத்தாலும், ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவதால் அதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் எடுபடாமல் போய்விடுகிறது.

மொத்தத்தில், இந்த ‘ராக்கி’ ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற எச்சரிக்கை பலகையாகவே இருக்கிறது.

-ஜெ.சுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *