Tamilசினிமாதிரை விமர்சனம்

100% காதல்- திரைப்பட விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே நடிப்பில், சுகுமார் கதையில், எம்.எம்.சந்திரமெளலி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘100% காதல்’ எப்படி என்று பார்ப்போம்.

பள்ளி, கல்லூரி என்று அனைத்திலும் முதல் மாணவராக வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் எதிலும், எங்கும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்று நினைக்க, அவரது முறை பெண்ணான ஷாலினி பாண்டே, ஜி.வி.பிரகாஷின் மீது உள்ள காதலால், அவரைப் போலவே நன்றாக படிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார். அதன் விளைவாக ஜி.வி.பிரகாஷையே பின்னுக்கு தள்ளிவிட்டு ஷாலினி முதலிடத்திற்கு வந்துவிடுகிறார். இதுவே இருவருக்கும் இடையே சிறு ஈகோவை ஏற்படுத்த, ஒரு கட்டத்தில் அது பெரிய அளவில் பிரச்சினையாக உருவெடுத்து, இருவரும் தங்களுக்குள் இருக்கும் காதலை சொல்லாமல் பிரிந்துவிடுகிறார்கள். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா அல்லது மீண்டும் தங்களது காதலை சொல்லமாலயே விலகினார்களா, என்பது தான் படத்தின் கதை.

காதலர்களுக்கு முதல் எதிரியே அவர்களிடம் இருக்கும் ஈகோ தான் என்பதை, கல்வி என்ற களத்தை பயன்படுத்தி சுகுமார் எழுதிய கதையும், இயக்குநர் எம்.எம்.சந்திரமெளலி அமைத்த திரைக்கதையும், இப்படத்தை இளைஞர்களுக்கான காதல் படமாக மட்டும் இன்றி, குட்டிஸ்கள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பினருக்குமான 100 சதவீத பொழுதுபோக்கு படமாக்கியிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே இருவருக்குமே நடிக்க அதிகம் வாய்ப்புள்ள படம். இருவரும் சேர்ந்து படத்தை தூக்கி சுமந்திருக்கிறார்கள். தங்களது துள்ளலான நடிப்பு மூலம் இருவருமே பாலு மற்றும் மகாலட்சுமி கதாபாத்திரங்களாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

தலைவாசல் விஜய், ஆர்.வி.உதயகுமார், ரேகா, ஜெயசித்ரா, நாசர், தம்பி ராமையா என்று பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இருந்தாலும் அனைவரும் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு பக்க வாத்தியமாக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் நடிகராக ஸ்கோர் செய்ததோடு இசையமைப்பாளராகவும் சபாஷ் வாங்குகிறார். இரண்டு பாடல்களை ரசிக்கும்படி கொடுத்திருப்பவர், பின்னணி இசையில், குறிப்பாக பீஜியத்தையும் மொலொடியாக கொடுத்து காதல் காட்சிகளுக்கு கூடுதல் ஈர்ப்பை இசை மூலம் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.கணேஷ், பழைய காலத்து பாணியில் காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

காதல் கதை, அதிலும் காதலர்களுக்கு இடையில் இருக்கும் ஈகோவும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சொல்லும் காதல் கதை என்பதால், முடிவு மற்றும் படத்தில் வரும் ட்விஸ்ட் என்னவாக இருக்கும் என்பதை படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே நம்மால் யூகிக்க முடிந்தாலும், அதை இயக்குநர் எப்படி சொல்லப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றாலும், 50 / 50 என்ற சதவீதத்தில் இயக்குநர் பூர்த்தி செய்திருக்கிறார்.

ஷாலினி பாண்டேவின் காதலை, வயது கோளாறு என்று கலாய்க்கும் ஜி.வி.பிரகாஷ், ஷாலினியின் ஹாட் லுக்கை பார்த்து ஜர்க்காவதும், அதற்கு ஷாலினி பாண்டே கொடுக்கும் கமெண்ட்டும் ரசிக்க வைக்கிறது. இருவரிடமும் காதல் இருந்தாலும், அதை காட்டிக்கொள்ளாமல், இயல்பாக நடித்த விதமும், க்ளைமாக்ஸின் போது காதலை வெளிப்படுத்தும் விதமும் பீல் பண்ண வைக்கிறது.

இளசுகளுக்கு பிடித்தமான ரொமாண்டிக் காட்சிகள் இருந்தாலும், அதை உறுத்தாத வகையில் இயக்குநர் படமாக்கியிருக்கும் விதம் சபாஷ் சொல்ல வைக்கிறது.

திரைக்கதை குறைவான வேகத்தில் நகர்வது குறைபாடாக இருந்தாலும், குட்டிஸ்களை வைத்து செய்திருக்கும் காமெடி அதை நிவர்த்தி செய்வதோடு, நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுமையான ஒரு காதல் படத்தை, எந்தவித முகம் சுழிக்கும் காட்சிகளும் இல்லாமல், அனைத்து தரப்பினரும் சிரித்து, ரசிக்கும்படியான காட்சிகளோடு படமாக்கப்பட்டிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில், 100 சதவீதம் மதிப்பெண் பெறவில்லை என்றாலும், இந்த ‘100% காதல்’ தேர்ச்சி பெற்றுவிடும்.

-ரேட்டிங் 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *