Tamilசினிமாதிரை விமர்சனம்

எனை நோக்கி பாயும் தோட்டா – திரைப்பட விமர்சனம்

கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ எப்படி, விமர்சனத்தை பார்ப்போம்.

பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும் காதலியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் ஹீரோ, எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் படத்தின் கரு.

கல்லூரி மாணவரான தனுஷுக்கும், மேகா ஆகாஷுக்கும் முதல் பார்வையிலேயே காதல் பிறந்துவிட, திடீரென்று எழும் பிரச்சினையால் மேகா ஆகாஷ், தனுஷை பிரிந்து சென்றுவிடுகிறார். சுமார் நான்கு வருடங்கள் கழித்து தனுஷை தொடர்பு கொள்ளும் மேகா ஆகாஷ், தான் மும்பையில் இருப்பதாகவும், தனக்கு ஆபத்து இருப்பதாகவும் கூற, ஆபத்தில் இருக்கும் காதலியை தேடி மும்பை செல்லும் தனுஷ், அவரை எப்படி காப்பாற்றுகிறார், என்பது தான் படத்தின் கதை.

சிம்புவை வைத்து கெளதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் இரண்டாம் பாகம் போன்ற கதையம்சத்தை இப்படம் கொண்டிருந்தாலும், தனுஷின் அண்ணனாக வரும் சசிகுமாரின் போர்ஷன் கவனிக்க வைக்கிறது.

’காக்க காக்க’ பாணியில் ஹீரோ கதை சொன்னாலும், அது படம் முழுவதும் தொடர்வது கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது. இருந்தாலும், மேகா ஆகாஷ், தனுஷ் ஜோடியின் உருக வைக்கும் காதலும், தனுஷின் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளும் நம்மை படத்துடன் ஒன்றிவிட செய்துவிடுகிறது.

அசுரன் படத்தில் வயதான தோற்றத்தில் வந்த தனுஷ், இதில் கல்லூரி மாணவராக இளமை ததும்பும் தோற்றத்தில், காதலிப்பது, சண்டைப்போடுவது, அண்ணனுக்காக கண்ணீர் விடுவது என்று அனைத்து ஏரியாவிலும் நடிப்பால் அசத்துகிறார்.

மேகா ஆகாஷ் அறிமுகமாகியிருக்க வேண்டிய படம், என்பது அவரது நடிப்பிலேயே தெரிந்துவிடுகிறது. இருந்தாலும், நடிப்பில் இருக்கும் குறைகளை தனது அழகால் மறைத்துவிடுகிறார்.

சில நிமிடங்கள் வந்தாலும் கவனிக்க வைக்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், மனதில் நின்று விடுகிறார்.

படத்திற்கு இசை தர்புகா சிவாவா அல்லது ஏ.ஆர்.ரஹ்மானா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு பின்னணி இசையும், பாடல்களும் அமைத்திருக்கிறது. ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டான ‘மறுவார்த்தை பேசாதே…” பாடல் காட்சிகளோடு பார்க்கும் போதும் இன்னும் பரவசப்படுத்துகிறது. ஜோமன் டி.டாம் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஆகியோரது ஒளிப்பதிவும், எடிட்டர் பிரவீன் ஆண்டனியின் பணியும் நேர்த்தியாக உள்ளது.

அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் ஒரு பக்கம், மறுபக்கம் நம்மை ஆஷ்வாசப்படுத்தும் ரொமான்ஸ் என்று இரண்டையுமே சமமாக கையாண்டிருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், இரண்டரை மணி நேரம் ரசிகர்களை உட்கார வைக்கும் அளவுக்கு மேஜிக் நிகழ்த்தியிருக்கிறார். அவரது முந்தைய படங்களின் பார்மெட்டில் திரைக்கதையும், காட்சிகள் நகர்த்தலும் இருந்தாலும், படம் நேர்த்தியாக உள்ளது.

படம் முழுவதும் கதையை விவரிக்கும் வாய்ஸ் ஓவர் வருவது ரசிகர்களை சற்று சலிப்படைய செய்தாலும், முழு படமும் போரடிக்காமல் பொழுதுபோக்காக நகர்கிறது.

மொத்தத்தில், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ கெளதம் மேனன் ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இருக்கிறது.

-ரேட்டிங் 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *