Tamilசெய்திகள்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தனது சமூக வலைதளப் பக்கங்களில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடுமையாக விமர்சித்திருந்தார். முந்தைய தலைமை நீதிபதிகளின் செயல்பாடு குறித்தும் டுவிட்டரில் விமர்சித்திருந்தார். நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என ஆகஸ்ட் 14ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 20-ம் தேதி நடத்திய உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தேதியை ஆகஸ்ட் 25-க்கு தள்ளி வைத்தது. பின்னர் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘பூஷன் பொதுநல வழக்குகள் மூலமாக நல்ல பணிகளை செய்திருக்கிறார். அவரை தண்டிக்க வேண்டாம்’ என ஆகஸ்ட் 25-ம் தேதி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து பூஷண் தனது பதிவுகளுக்கு வருத்தம் தெரிவிக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் தனது முழு நம்பிக்கை அடிப்படையில் வெளியிட்ட ட்வீட்களுக்கு வருத்தம் தெரிவிப்பது, உண்மையானதாக இருக்காது என பூஷன் குறிப்பிட்டார். 2 முறை வாய்ப்பு வழங்கியும் பூஷண் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தண்டனை தொடர்பான தீர்ப்பு ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தண்டனை விவரத்தை அறிவித்தது. அப்போது, பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஒரு ரூபாய் அபராதத்தை செப்டம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாதம் சிறைத்தண்டனை மற்றும் 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக செயல்பட தடை விதித்து உத்தரவிட்டனர்.