Tamilசெய்திகள்

துபாயில் வழக்கம் போல் விமான சேவை தொடரும் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு காலமானதால் அமீரகம், இந்தியா இடையே பப்புள் சேவை (இருநாடுகளும் குறிப்பிட்ட விமான நிறுவனங்களை, வரையறுக்கப்பட்ட காலத்தில் இயக்குவதற்கு இணைந்து செயல்படுவது) ஒப்பந்தம் மூலமாக மீட்பு பணி விமானங்களை இயக்கி வருகிறது. இந்த ஒப்பந்தம் அமீரகம் இந்தியா, இடையே அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை உள்ளது.

இதில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினமும் விமான சேவையானது இருந்து வந்தது. அதேபோல் இந்தியாவில் இருந்து அமீரகம் திரும்பும் பயணிகளும் இந்த விமானங்களில் அழைத்து வரப்பட்டனர். சமீபத்தில் இந்தியாவின் டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் பகுதிகளில் இருந்து துபாய் வந்த வெவ்வேறு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணம் செய்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் ஒருவர் கடந்த மாதம் 28-ந் தேதியும், மற்றொருவர் கடந்த 4-ந் தேதியும் துபாய் வந்துள்ளனர். இதனை தொடர்ந்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 15 நாட்களுக்கு அந்த விமானங்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வருவதோ அல்லது செல்வதோ கூடாது என துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. அந்த அறிவிப்பில் நேற்று முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை 15 நாட்களுக்கு அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் சார்ஜாவில் இருந்து மாற்று விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று மாலையே இந்த முடிவு மாற்றப்பட்டது. இதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் விமானங்கள் வழக்கம்போல் துபாய், இந்தியா இடையே இயக்கப்படும் என அறிவித்துள்ளது. சார்ஜாவில் மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.