Tamilசெய்திகள்

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு 10 வது மாதமாக தடை!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் நிகழ்ச்சிக்கு புகழ் பெற்றது. இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இதில் உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் சிறு வியாபாரிகள் முதல் பல்வேறு தரப்பினரும் பக்தர்களின் வருகையால் வருமானம் பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருவண்ணாமலையில் ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து பவுர்ணமி கிரிவலத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் 2021-ம் ஆண்டின் முதல் பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் 2 மணியளவில் தொடங்கி 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை ‌சுமார் 2 மணி வரை உள்ளது. இந்த பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்

ஆனால் புதிய வகை கொரோனா பரவி வருவதால் மீண்டும் அதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்துள்ளார். மேலும் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து 10-வது மாதமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது பக்தர்கள் மத்தியில் வேதனை அளிப்பதாகவும், உடனடியாக தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்களும், ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.