Tamilசெய்திகள்

நாம் கட்சி வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டுகிறார்கள் – சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சி ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு அந்த கட்சி வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் பல தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக 3-வது இடங்களை பிடித்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்களையும் அந்த கட்சி சந்தித்து உள்ளது. இதில் பல இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைத்து ஊரக பதவிகளுக்கும் போட்டியிடுகிறார்கள். அவர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சீமான் அளித்த பேட்டி வருமாறு:-

நாம் தமிழர் கட்சி நேர்மையாக தேர்தலை சந்திக்கிறது. இதுவரை நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் பணமோ, பரிசு பொருளோ கொடுத்தது இல்லை. மக்களை நம்பி நாங்கள் களம் காண்கிறோம்.

மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனை தேர்தல் முடிவுகள் காட்டி வருகின்றன. எங்கள் வளர்ச்சியை மற்ற அரசியல் கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பல இடங்களில் உள்ளாட்சி தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தி.மு.க.வினர் மிரட்டியுள்ளனர்.

இதற்கெல்லாம் நாம் தமிழர் கட்சி தம்பிகள் அஞ்ச மாட்டார்கள். கடந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி பல இடங்களில் வென்று உள்ளது. கிராமங்களிலும் நாங்கள் செல்வாக்கோடு திகழ்கிறோம்.

நாம் தமிழர் கட்சிக்கு தற்போது 102 ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் இது நாங்கள் பெற்ற வெற்றியாகும். 12 சதவீத ஓட்டுகளை அப்போது வாங்கினோம். இந்த தேர்தலில் அதை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தல் முடிவுகளின் போது எங்கள் பலம் என்ன என்பது தெரியவரும். கிராமங்கள் தோறும் மக்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் கோட்பாடுகளை எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்டு வருகிறோம்.

பல இடங்களில் தி.மு.க. வினர் நேரடியாக எங்களோடு மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். அதனை நாம் தமிழர் கட்சியினர் எதிர்கொண்டு தடைகளை தாண்டி தேர்தலை சந்திக்க தயாராகி இருக்கிறார்கள்.

எங்களை எதிர்த்து வெற்றி பெற முடியாதோ என்கிற அச்சத்தில் அரசியல் கட்சியினர் குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறார்கள்.

கிராமங்களில் பல இடங்களில் தங்க நகைகளையும், பட்டுப்புடவைகளையும் பொதுமக்களுக்கு பரிசாக வழங்கி அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

ஆனால் நாம் தமிழர் கட்சியினர் கொள்கைகளை கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். மக்கள் நிச்சயம் எங்களை ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சியிலும் நல்லாட்சி தருவோம் என்று கூறி இருக்கிறார்.

உங்களிடம் நாட்டையே கொடுத்து இருக்கிறோம். அதில் நல்லாட்சி தர முடியவில்லை. உள்ளாட்சியிலா தரப்போகிறீர்கள். இதுபற்றி எங்களிடம் நேருக்கு நேர் விவாதிக்க நீங்கள் தயாரா? நாம் தமிழர் கட்சிதான் எதிர்காலத்தில் நல்லாட்சியை தரும்.

இந்த நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியிலும் ஏற்பட்டு வருகிறது.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.