Tamilசெய்திகள்

நாகலாந்து துப்பாக்கி சூடு விவகாரம் – கொலை வழக்காக பதிவு

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ளது மோன் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஒடிங் மற்றும் திரு என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு வேன் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்புப் படையினர், வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக்கருதி தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு வீரரும் பலியானார்.

இந்த சம்பவத்தால் மோன் மாவட்டத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதளம், செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே உயர்மட்ட விசாணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் கூறியிருந்தார். இந்த நிலையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே கோபம் அடைந்த பொதுமக்கள் அசாம் ரைபிள் முகாமிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு நபர் உயிரிழந்தார். இதுவரை இந்த சம்பவத்தில் 14 பொதுமக்கள் மற்றும் ஒரு வீரர் என 15 பேர் உயிரிழந்துள்ளனர்.