Tamilசெய்திகள்

கிராம நிர்வாக அதிகாரிக்கு கொடுக்கப்படும் லஞ்சம் – பட்டியலை பேனராக வைத்து பரபரப்பு ஏற்படுத்திய மர்ம நபர்

அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்று பெற்ற பின்பே விண்ணப்பிக்க முடியும். இதனால் தினந்தோறும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சான்றிதழ் தொடர்பாக பொதுமக்கள் செல்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் பகுதியில் அறிவிப்பு பேனர் ஒன்றை யாரோ வைத்துள்ளனர். அதுவும் முக்கிய அறிவிப்பு என்று அந்த பேனரின் தலைப்பில் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு, அதற்கு கீழ் மணியக்கார அம்மாவிடம்சென்று யாரும் வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஒவ்வொரு சான்றுக்கும் எவ்வளவு லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று தொகை விவரம் அதில் எழுதப்பட்டுள்ளது.

இந்த தொகையை கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும். மீறி ஏதாவது கேட்டால் உங்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும் என்றும் அந்த பேனரில் எழுதப்பட்டுள்ளது.

இந்த பேனர் வைத்துள்ள பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் ஒரு நிமிடம் நின்று அந்த பேனரில் எழுதப்பட்டுள்ள வாசகங்களை படித்த பின்னரே அங்கிருந்து செல்கிறார்கள். ஒவ்வொரு சான்றையும் பெற எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று வைக்கப்பட்டுள்ள இந்த பேனரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.