Tamilசெய்திகள்

உக்ரைன் விவகாரம் – ரஷ்ய அதிபருக்கு உலக நாடுகள் கண்டனம்

உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை நிலை நிறுத்தியுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளின் எல்லையில் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையே, உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகன்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக அதிபர் புதின் நேற்று அறிவித்தார். அங்கு ரஷ்ய படைகள் நுழைவதற்கு உத்தரவிட்டதால் அங்கு போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைய உத்தரவிட்ட அதிபர் விளாடிமிர் புதினுக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டை ரஷ்யா மீறியுள்ளது. புதின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நாங்கள் எங்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறோம் என்றார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறுகையில், ரஷ்யாவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மற்ற நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இணைந்திருப்போம் என தெரிவித்தார்.

இதேபோல், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், நியூசிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி நனாயா மகுதா, துருக்கி வெளியுறவுத் துறை மந்திரி மெவ்லூட் கவுசோக்லு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.