Tamilசெய்திகள்

தமிழகத்தில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. வருகிற 28ந்தேதி வரை இது நீடிக்கும்.  24ந்தேதி வரை அனல் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றும் இயல்பான அளவை விட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நேற்று முன்தினம் 13 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களை தவிர வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தை தணிக்க இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவது நல்லது என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று கோவை சூலூர், உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், இராமநாதபுரம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

தருமபுரி மாவட்டம் ஜக்கம்பட்டி கிராமத்தில் கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் முனியப்பன்(50) என்பவர் உயிரிழந்துள்ளார்.

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.