Tamilசினிமா

திருப்பதியில் திருமணம் நடக்காதது ஏன்? – இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்

நடிகை நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9-ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமண ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நயன்தாரா இந்த திருமணத்தை எந்தளவுக்கு எளிமையாக ரகசியமாக நடத்த திட்டமிட்டாரோ அதற்கு மாறாக அதைவிட அதிக பரபரப்பாக தென்னிந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் அளவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

திருமணத்தில் பணியாற்ற பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இரு வீட்டாரின் உறவினர்களையும் அழைத்து வந்து தங்க வைப்பதும், அவர்களுக்கு தேவையானவற்றைக் கவனித்துக் கொள்ளவும் தனித்தனியாக குழுக்கள் இருக்கின்றன. வி.ஐ.பி.களை வரவேற்கவும், மணமேடையை கவனித்துக் கொள்ளவும் ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். விருந்து உபச்சாரத்தில் மட்டும் 50 பேர் கொண்ட குழு பணியாற்ற இருக்கிறது.

திருமணத்திற்கு அழைத்த வி.ஐ.பி.களில் ரஜினிகாந்த். அஜித் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என்று நயன்தாரா தரப்பில் கூறப்படுகிறது. இந்த திருமண கோலாகலத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெரிய தொகைக் கொடுத்து வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பல ஓடிடி தளங்களுக்குள் நடந்த போட்டியில் நெட்பிளிக்ஸ் கொடுத்தது பெரிய தொகை என்கிறார்கள்.

இதனை படம் பிடிக்க பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் பொறுப்பை ஒப்படைத்து உள்ளது ஓடிடி தளம். விக்னேஷ் சிவன் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தை படம் எடுப்பதற்கு முன்பு கடற்கரை பகுதியில் இருக்கும் தனியார் ஓட்டலில் பிரமாண்டமான அரங்கு அமைத்து திருமண ஒத்திகை படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் கவுதம் மேனன். இந்த ஒத்திகை படப்பிடிப்பே பிரமாண்டமாக இருந்தது என்கிறார்கள்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பேசியபோது கூறியதாவது:-

ஒரு இயக்குனர், எழுத்தாளராக என் வாழ்க்கையை தொடங்கினேன். இன்று ‘ரௌடி பிக்சர்ஸ்’ கம்பெனியை தொடங்கி அதன் மூலம் படங்களைத் தயாரித்து அதை ஆஸ்கர் வரைக்கும் கொண்டு சென்றோம். ஒரு கவிஞராக நான் எழுதிய பல பாடல்களை வெற்றி பெற வைத்திருக்கிறீர்கள். நான் எடுத்த போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற எல்லா படங்களுக்கும் ஆதரவு கொடுத்தீங்க. நீங்க கொடுத்த ஒரு நம்பிக்கை என்னை வேலை செய்ய வைத்தது. இவ்ளோ நாள் நீங்க கொடுத்த ஆதரவில் என் வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு நான் போகப்போகிறேன். நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். முதலில் திருப்பதியில்தான் திருமணம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இங்கிருந்து வி.ஐ.பி.களை அழைத்துச் செல்வது உள்பட பல காரணங்களால் அங்கு நடத்த முடியவில்லை. அதனால் மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்தோம். குடும்ப உறுப்பினர்கள், ஒரு சில நண்பர்கள் சூழ திருமணம் நடக்க இருக்கிறது என்பதை இந்த சந்திப்பில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று கூறினார்.