Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி – இலங்கை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் இலங்கை 2-1 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரித் அசலங்கா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 110 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த தனஞ்செய டி சில்வா அரை சதமடித்து 60 ரன்னில் அவுட்டானார்.

ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், மேத்யூ குனமென் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பாட் கம்மின்ஸ் 35 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-1 கைப்பற்றி அசத்தியது. இலங்கை அணியின் அசலங்கா ஆட்ட நாயகன் விருது வென்றார். இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.