Tamilசெய்திகள்

சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் இணைவதில் புதிய சிக்கல்?

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொள்ளாத ஓ.பி.எஸ். எப்படியாவது கட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வியூகம் அமைத்து வருகிறார். சட்டரீதியாக தனி ஒருவராக நின்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சறுக்கலைத் தான் கொடுத்துள்ளது. அவரது இன்னொரு முயற்சி சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரையும் அ.தி.மு.க.வுக்குள் இணைக்க வேண்டும் என்பது தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் கட்சிக்காக உழைத்து வரும் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படையாக கூறினார்.

சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திக்க போவதாகவும் அறிவித்தார். ஓ.பி.எஸ்.சின் அழைப்பை தினகரனும் வரவேற்று உள்ளார். ஆனால் இப்போது ஓ.பி.எஸ். தொடங்கி தோற்றுப் போன தர்மயுத்தமே அவரது இந்த முயற்சிக்கும் முட்டுக்கட்டையாக மாறி இருக்கிறது. அதாவது 2016-ல் ஜெயலலிதா மறைந்ததும் சின்னம்மா என்று அழைத்த சசிகலாவுக்கு எதிராகவே ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தை தொடங்கினார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். சசிகலாவை எதிர்த்து கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும். ஜெயலலிதா மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிர வைத்தார்.

அடுத்த சில மாதங்களில் காட்சிகள் மாறியது. சசிகலா சிறை சென்றார். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கை கோர்த்தனர். துணை முதல்-அமைச்சராக இ.பி.எஸ்.-சுக்கு துணையாக இருந்தார். ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை கமிஷன் அறிக்கையும் அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா உள்ளிட்டோரின் மீது பங்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தமிழக அரசு தயாராகி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் அன்று வைத்த கோரிக்கை வலுப்பெற்று, பல வடிவங்களில் உருவெடுத்து இப்போது சசிகலாவையும் நெருக்கடிக்குள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இதனால் ஓ.பி.எஸ். சசிகலா இணைவதற்கான வாய்ப்பும் மங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.