Author: rediuser1

Tamilசெய்திகள்

வட மாவட்டங்களில் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் பின் தங்கியுள்ளது – அன்புமணி ராமதாஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- தமிழகத்தில் மே 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பா.ம.க. இளைஞர் பெருவிழா மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மிகப்பெரிய எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் குறிப்பாக தம்பி, தங்கைகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சமூக நீதி என்பது ஆகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார். இந்த கோரிக்கை மூலமாக தமிழகத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு அவரவர் சமூகத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். எனவே தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளது. இதில் 20 மாவட்டங்கள் மிக மிக பின் தங்கியுள்ளது. இந்த பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு தனி திட்டங்களை வகுத்து அந்த மாவட்டங்களை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். இதில் 15 மாவட்டங்கள் வட மாவட்டங்களாக உள்ளது. இங்கு கல்வி, சுகாதார வேலைவாய்ப்பு, தொழில்கள் அனைத்துமே மந்தகதியில் உள்ளது. ஆனால், டாஸ்மாக் கடை விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Read More
Tamilசெய்திகள்

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் பதிவு பெற்ற அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறோம். எங்களுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களும், 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது. பட்டியலின, மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். இந்நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள எங்களது கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி நெடுஞ்சாலை துறை பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை செய்து தமிழகத்தில் நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, ஊரக மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சி, சாதிய இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கொடி மரங்கள், கல்வெட்டு தூண்கள் அகற்ற உத்தரவிட்டதன் அடிப்படையில் எங்களது கட்சி கொடி மரங்களை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது. எனவே அரசியல் கட்சி கொடி மரங்களை அகற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் இந்த வழக்கை விரிவான விசாரணைக்காக ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Read More