அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகள் இங்கிலாந்தில் நடக்கிறது – ஐசிசி அறிவிப்பு
முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. இதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பையும் இங்கிலாந்துக்கே ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்படி 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் லண்டன் ஓவலிலும், 2025-ம் ஆண்டு இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சிலும் நடைபெறுகிறது. இதற்கான தேதி விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 70 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 5-வது இடத்திலும் உள்ளன.