Tamilசெய்திகள்

அரியானாவில் பாலத்தில் இருந்து கவிழ்ந்து லாரி விபத்து – இரண்டு பேர் பலி

அரியானா மாநிலம், டெல்லி- மும்பை- விரைவுச்சாலையில் உள்ள இப்ராஹிம் பாஸ் கிராம பகுதியில் நேற்று 20-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் 4 எருமை மாடுகளும் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து பேருடன் பயணித்த லாரியின் டயர் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நசீர் (27) மற்றும் இம்ரான் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
படுகாயமடைந்த மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.