Tamilவிளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது.

அடுத்ததாக 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் மும்பையில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
ஆஸ்திரேலியா டெஸ்டில் தடுமாற்றம் கண்டாலும் குறுகிய வடிவிலான போட்டிகளில் அசுர பலமிக்கது. 50 ஓவர் உலகக் கோப்பையை 7 முறை கைப்பற்றி வாகை சூடியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 50 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ள இந்தியா அதில் 40-ல் தோல்வியை சந்தித்துள்ளது. 10-ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது. அதுவும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக ஆடிய 7 ஆட்டங்களில் இந்தியாவுக்கு சோகமே மிஞ்சியிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இந்த முறை முட்டுக்கட்டைபோடும் உத்வேகத்துடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஆல்-ரவுண்டர்கள் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா தாக்குர், சுழற்பந்து வீச்சாளர்கள் சினே ராணா, ஸ்ரேயங்கா பட்டீல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தயாராகி வருகிறார்கள்.

இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜூம்தர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆஸ்திரேலியா சிறந்த ஒரு அணி. நீண்ட காலமாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதனால் தான் அவர்கள் 50 ஓவர் போட்டியிலும் சரி, 20 ஓவர் போட்டியிலும் சரி நிறைய உலகக் கோப்பைகளை வென்று இருக்கிறார்கள். அதே சமயம் நாங்கள் எங்களது பலத்துக்கு தக்கபடி கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். மேலும் உலகின் மிகச்சிறந்த ஒரு அணிக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு நாளிலும் நாங்கள் முன்னேற்றம் காண்பதை எதிர்நோக்கி உள்ளோம். அதை செய்தாலே எனக்கு மகிழ்ச்சி தான்’ என்றார்.

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் அலிசா ஹீலி, கிம் கார்த், லிட்ச்பீல்டு, தாலியா மெக்ராத், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, அனபெல் சுதர்லாண்ட், ஆஷ்லி கார்ட்னெர், மேகன் ஸ்கட் என்று தரமான வீராங்கனைகளுக்கு பஞ்சமில்லை. டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் வரிந்து கட்டுவார்கள். பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.