Tamilசெய்திகள்

இன்று சர்வதேச தாய்மொழி தினம்

தகவல் பரிமாற்றத்தின் அடித்தளம் மொழிகள் தான் எனலாம். ஒவ்வொருவரும் மற்றவர்களின் மொழி மீது மரியாதை கொடுப்பது சிறப்பான முறையில் தகவல் பரிமாற்றம் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உலகம் முழுக்க ஏராளமான மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஒரே மொழியை பலவிதங்களில் உச்சரிக்கும் வழக்கமும் உண்டு.

ஒரு சில கிலோமீட்டர் இடைவெளிக்குள் பல வட்டார வழக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. வட்டார வழக்கு மொழியை கற்பதில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், இதுவே உலக பன்முகத்தன்மையின் அழகு. பல்வேறு கலாசாரங்களை கொண்ட நாடு என்ற வகையில், இந்தியா உலகின் மற்ற நாடுகளை விட தனித்து நிற்கிறது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இந்தியாவில் மொத்தம் 780 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. உலகளவில் அதிக மொழிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பப்புவா நியூகினியா உள்ளது. இந்த நாட்டில் மொத்தம் 840 மொழிகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

உலகில் ஏராளமான மொழிகள் பயன்பாட்டில் இருந்தாலும், தாய்மொழி வாயிலாகவே ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்ய துவங்குகிறார். மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், தாய்மொழி சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வங்காள மொழியை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். 1999-ம் ஆண்டு சர்வதேச தாய்மொழி தினத்தை யுனெஸ்கோ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சர்வதேச தாய்மொழி தினத்திற்கான தீம்- “பலமொழி கல்வி” ஆகும். “பாரம்பரியம் பற்றிய அறிவு மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான வழித்தடங்களாக செயல்படும் தங்களது மொழிகளை பாதுகாப்பதன் மூலம் பன்மொழி மற்றும் பன்முக கலாசார சமூகங்கள் செழித்து வளர முடியும்.”

“பல்வேறு மொழிகள் அழிந்து வருவதால் மொழியியல் பன்முகத்தன்மை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. தற்போது, உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தங்கள் தாய்மொழியில் கல்வி பெறுவதற்கான வசதிகளை பெற முடிவதில்லை. மேலும், இது குறிப்பிட்ட பகுதிகளில் 90 சதவீதத்தை தாண்டியுள்ளது,” என ஐக்கிய நாடுகள் சபையின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.