Tamilசெய்திகள்

இன்ஸ்பெக்டருடன் காவல் நிலையங்களை வாடகைக்கு விடும் கேரள அரசு!

கேரள மாநிலத்தில் போலீஸ் நிலையங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

மேலும் ஒவ்வொரு வசதிக்கான கட்டண பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு போலீஸ் நிலையத்திற்கு ரூ12 ஆயிரம், வயர்லெஸ் கருவிகளுக்கு ரூ12ஆயிரத்து 130, மோப்ப நாய்க்கு ரூ7ஆயிரத்து 280, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ3 ஆயிரத்து 35 முதல் ரூ3ஆயிரத்து 340 வரை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தமாக ஒரு போலீஸ் நிலையம், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், வயர்லெஸ் கருவிகள், மோப்பநாய் என அனைத்தும் சேர்த்து ரூ34 ஆயிரத்து 750 கட்டணமாக இருக்கிறது. இன்ஸ்பெக்டருக்கு பதிலாக சிவில் போலீஸ அதிகாரிக்கான கட்டணம் ரூ610 ஆகும். காவல்துறை வெளியிட்டுள்ள இந்த பட்டிலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை.

காவல்துறையின் இந்த முடிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அரசு அதிகாரிகள் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது. ஆனால் இது நிதிநிலையை உயர்த்துவதற்கான திட்டம் இல்லை என்றும், இது ஏற்கனவே உள்ள பழைய திட்டம் எனவும், புதிய கட்டணங்களுடன் தற்போது வெளிவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.