Tamilசெய்திகள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் விடுதலை – படகுகள் அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவு

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். 23-ந்தேதி அதிகாலை அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜசக் (வயது 47), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (43) ஆகியோருக்கு சொந்த மான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படலில் இருந்து ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (34), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்கள் அங்குள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். எல்லை தாண்டியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் 6 பேரையும் விடுதலை செய்ய நீதிபதி கஜநிதி பாலன் உத்தரவிட்டார். மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கை நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விரைவில் விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவல் சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.