Tamilவிளையாட்டு

இளம் வீரர்கள் புஜாராவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் – நாதன் லயன்

இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 197 ரன்களில் ஆல் அவுட் ஆனதுடன் 88 ரன்கள் முன்னிலை பெற்றது.

2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களில் புஜாரா ஒருவர் மட்டுமே லயன் பந்துவீச்சை தாக்குபிடித்து ஆடினார். அவர் 142 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 59 ரன் எடுத்தார்.

இந்த நிலையில் இளம் வீரர்கள் புஜராவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று லயன் கூறியுள்ளார். போட்டிமுடிந்த பிறகு இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-

டெல்லி டெஸ்ட் தோல்விக்கு பிறகு அணியை கட்டமைக்க நீண்ட ஓய்வு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டோம். இந்திய அணி திறமையானது. அவர்களுக்கு எதிராக சொந்த மண்ணில் ஆடுவது சவாலானது. நான் நம்பிக்கையுடன் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தேன்.

ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு விதமாக வீசினேன். புஜாராவின் கேட்ச்சை ஸ்டீவ் சுமித் பிடித்தது மிகவும் சிறப்பானது. இக்கட்டான நேரத்திலும் எப்படி விளையாடுவது என்பதை இளம் வீரர்கள் புஜாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு லயன் கூறி உள்ளார்.