ஈரானிய கப்பல்கள் சிறைபிடிப்பு – 17 ஈரானியர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி சோமாலியா கடற்கொள்ளையர்களும் கப்பல்களைக் கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பை வழங்குவதற்காக நிறுத்தப்பட்டு வருகின்றன. ஈரானை சேர்ந்த 17 பேர் கிழக்கு சோமாலியாவின் ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை சிறைபிடித்தனர். அங்கு ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா விரைந்து சென்று மீன்பிடி கப்பலில் இருந்த 17 ஈரானியர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா கொச்சி கடற்கரையில் இருந்து 800 மைல் தொலைவில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களுடன் கடத்தப்பட்ட ஈரான் கொடியுடன் பறந்த அல் நமீமி என்ற கப்பலை மீட்டது. இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் படகிலிருந்த 19 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கடற்படையின் இரண்டாவது வெற்றிகரமான கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும்.