உலகக் கோப்பை கிரிக்கெட் – நெதர்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியுடன் நெதர்லாந்து மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திரா, வில் யங், டாம் லாதம் ஆகியோரின் அரை சதத்தால் 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது.
நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
நெதர்லாந்து அணி அதிகபட்சமாக கொலின் அக்கர்மேன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியில் நெதர்லாந்து அணி 46.3 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 5 விக்கெட்டும் மாட் ஹென்றி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.