Tamilசெய்திகள்

ஊரக வேலை திட்டத்தில் ரூ.6,366 கோடி சம்பள பாக்கி – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தகவல்

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

2005-ம் ஆண்டு இதே தேதியில் (ஆகஸ்ட் 23-ந்தேதி) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம், கோடிக்காணக்கான மக்களுக்கு வேலை உரிமை என்பதை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டது.

தற்போதைய நிதியாண்டில் மோடி அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில் 33 சதவீதம் அளவில் குறைத்த போதிலும் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படக் கூடிய 6,366 கோடி ரூபாய் சம்பளத் தொகையை பாக்கி வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியால் கொண்டு வந்த இந்த திட்டத்தின் மூலம், 14.42 கோடி பேர் வேலை செய்கிறார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவார்கள். கொரோனா தொற்றின் போது வேலைவாய்ப்பு இல்லாத போது, இந்த திட்டம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு கைக்கொடுத்தது.

80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் இருந்தபோது, கோடிக்கணக்கான மக்களை இது பாதுகாத்தது. அவர்களது கடுமையான காலத்தில் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.