ஐபிஎல் கிரிக்கெட்ட் – பெங்களூர் அணியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 31-வது லீக் ஆட்டம் நேற்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி. அணி 92 ரன்னில் படுமோசமாக சுருண்டது.
பின்னர் 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. பேட்டிங்கில் சொதப்பிய ஆர்.சி.பி. பந்து வீச்சிலாவது சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.1 ஓவரில் 82 ரன்கள் குவித்தது. ஷுப்மான் கில் 34 பந்தில் 48 ரன்கள் விளாசினார். வெங்கடேஷ் அய்யர் 27 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.