ஐ.எஸ்.எல் கால்பந்து – காயம் காரணமாக சென்னை அணி கேப்டன் விலகல்
கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கடந்த 29-ந் தேதி நடந்த சென்னையின் எப்.சி.-மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’வில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் ரபெல் கிரிவெல்லாரோவிடம் இருந்து பந்தை பறிக்க முயன்ற போது, எதிரணி வீரர் பிரனாய் ஹால்டெர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில் கிரிவெல்லாரோ இடது கணுக்காலில் காயம் அடைந்து வெளியேறினார். இதனால் அவர் அடுத்த ஆட்டத்தில் ஆடவில்லை.
இந்த நிலையில் அவரது காயத்தின் தன்மையை ஆய்வு செய்த அணியின் டாக்டர்கள் குணமடைய குறைந்தபட்சம் 2 மாதம் பிடிக்கும் என்று தெரிவித்ததை அடுத்து அவர் இந்த போட்டி தொடரில் இருந்து நேற்று விலகினார். பிரேசிலை சேர்ந்த 31 வயது நடுகள வீரரான கிரிவெல்லாரோ உடனடியாக நாடு திரும்புகிறார். இந்த சீசனில் ஒரு கோல் அடித்து இருந்த சிறந்த வீரரான கிரிவெல்லாரோவின் விலகல் சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருவதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.