Tamilசெய்திகள்

ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி

கடந்த 2022 ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி சில உத்தரவுகளை பிறப்பித்தார். பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே, அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ். மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்தார். மேலும் வழக்கை நவம்பர் 30-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் நவம்பர் 8-ந்தேதி, தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்து விட்டதால் வழக்கை நவம்பர் 10-ந்தேதி விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்த பிறகும் கூட, வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே, இன்றைக்கே இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணை தொடங்கி நடத்தப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன், தகுதி நீக்கம் செல்லும் என ஏற்கனவே 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு. கொடி, சின்னம் பயன்படுத்தக்கூடாது என்ற தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு சமமானது. இடைக்கால உத்தரவின் அடிப்படையில் தடை விதிக்க முடியாது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கீல் விஜயின் நாராயண் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தடையை நீக்கக் கோரும் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் இன்று காலை தீர்ப்பளித்தனர். அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. அந்த தடையை நீக்க முடியாது.

எனவே இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இந்த விவகாரத்தில் நிவாரணம் வேண்டி, தனி நீதிபதியிடமே ஓ.பன்னீர்செல்வம் முறையீடு செய்யலாம். அதுபோன்று அவர் மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் அந்த மனுவை தனி நீதிபதி சட்ட ரீதியாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

அ.தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் ஐகோர்ட்டு நீதிபதிகள் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மேலும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அ.தி.மு.க. கொடி மற்றும் கட்சி பெயரை பயன்படுத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. தனி நீதிபதியின் தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வமும் அவரது அணியினரும் கடந்த 2½ மாதங்களாக அ.தி.மு.க. கொடி சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.