Tamilசெய்திகள்

காந்தியின் மாண்பை சீர்குலைக்கும் நோக்கில் பேசிய மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், “தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பே 1909 ஆண்டு – ரஷ்யாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய், 1920 ஆண்டு – வியட்நாம் புரட்சியாளர் ஹோசிமின், 1931 ஆண்டு – அறிவியல் உலகின் அணையா விளக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1931 ஆண்டு – ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர் சார்லி சாப்ளின், 1940 ஆண்டு – நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவரும், தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவருமான நெல்சன் மண்டேலா, 1940 ஆண்டு – ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவரின் விடிவெள்ளியாக, நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்தவர் மார்ட்டின் லூதர் கிங்,1950 ஆண்டு – தி லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி வரலாற்று படைப்பை பதிந்த அமெரிக்க பத்திரிகையாளர் லூயிஸ் பிஷ்ஷர் மற்றும் இவர்களை போன்ற புகழ்பெற்ற ஏராளமானவர்கள் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டவர்கள். அவரை பின்பற்றியவர்கள். போற்றியவர்கள்.

மோடி போன்ற காந்தியின் வரலாறு அறியாதவர்கள் அவரை குறித்து அவதூறு கருத்து சொல்வதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தந்தையின் மாண்பை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசிய மோடி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.