Tamilவிளையாட்டு

கிரிக்கெட் வீரர்கள் யாரும் கொரோனா தடுப்பு விதியை மீறவில்லை – சவுரவ் கங்குலி அறிவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது எந்த வீரரும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை மீறவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), விருத்திமான் சஹா (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி (சென்னை சூப்பர் கிங்ஸ்), அமித் மிஸ்ரா (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ-பபுள்) மீறி வீரர்கள் இடையே எப்படி கொரோனா பரவியது என்பது தெரியாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் குழம்பி போய் உள்ளது. 4 அணிக்குள் கொரோனா ஊடுருவியதால் வேறு வழியின்றி ஐ.பி.எல். போட்டியை ஒத்திவைக்க வேண்டியதாகி விட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

எனக்கு தெரிந்தவரை, வீரர்கள் யாரும் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்திருக்கும் அறிக்கையும் அப்படி தான் கூறுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எப்படி அதிகரித்தது என்பதை கூறுவது கடினம். அதே போல் தான் ஐ.பி.எல். தொடரிலும் கொரோனா எப்படி வந்தது என்று கேட்டால், அதற்கு பதில் அளிப்பது மிகவும் கடினம்.

கடந்த ஆண்டை போலவே இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று முதலில் ஆலோசித்தோம். ஆனால் போட்டி அட்டவணையை திட்டமிட்ட சமயத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகமிக குறைவாக இருந்ததால் இந்தியாவிலேயே போட்டியை நடத்துவது என்று முடிவுக்கு வந்தோம். அத்துடன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை உள்ளூரில் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த மும்பையில் கூட ஐ.பி.எல். தொடக்ககட்ட லீக் ஆட்டங்களை எந்தவித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது திடீரென கொரோனா பரவல் அதிகரித்தது துரதிர்ஷ்டவசமானது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள் நலமுடன் உள்ளனர். அவர்கள் சிறந்த முறையில் குணப்படுத்தப்பட்டு அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

பாதுகாப்பு வளையத்தையும் மீறி கொரோனா பரவிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை குறை கூறுவது நியாயமற்றது. உலகம் முழுவதும் பல போட்டிகளில் இது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்து, லா லிகா கால்பந்து போட்டிகளின் போதும் வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை மறந்து விடக்கூடாது.

எனவே ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் இடையே கொரோனா பரவியதன் பின்னணி குறித்து அறிய நாங்கள் விசாரணை நடத்தியாக வேண்டும். கடந்த ஆண்டு அமீரகத்தில் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய 3 இடங்களில் மட்டுமே ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டது. அதுவும் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வதற்கு கடும் கட்டுப்பாடு இருந்தது. எந்த இடத்திற்கும் விமானம் மூலம் செல்லாமல் தரைமார்க்கமாகவே பயணித்தோம். ஆனால் இந்தியாவில் 6 நகரங்களில் ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் விமானம் மூலம் தான் மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. இந்த பயணத்தின் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். மேலும் நாட்டின் நிலைமையையும் நீங்கள் பார்க்க வேண்டும். நாளுக்கு நாள் கொரோனாவில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நாளை என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.

நடப்பு ஐ.பி.எல்.-ல் இன்னும் 31 ஆட்டங்கள் நடத்த வேண்டி உள்ளது. ஐ.பி.எல். போட்டியை நாங்கள் முழுமையாக நடத்த முடியாமல் போனால் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். இது தொடக்கட்ட மதிப்பீடு தான்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த வேண்டும் என்றால் அதற்குரிய காலஇடைவெளியை உருவாக்க வேண்டும். இதையொட்டி அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடனும் பேச வேண்டும். நிறைய விஷயங்கள் இதில் உள்ளடங்கி இருக்கிறது. எனவே அதற்கான வேலையை படிப்படியாக தொடங்குவோம்.

இவ்வாறு கங்குலி கூறினார்.