சென்னை விமான நிலையத்தில் 3,116 கிராம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த 9ந் தேதி சென்னை வந்த பயணி ஒருவரை இடைமறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், நூதன முறையில் மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ.30.31 லட்சம் மதிப்பிலான 690 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் துபாயில் இருந்த வந்த முகமது பலீல் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பசை வடிவத்தில் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ.65.30 லட்சம் மதிப்பிலான 1,486 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரை சோதனையிட்டதில், ரூ.30.09 லட்சம் மதிப்பிலான 685 கிராம் தங்கத்தினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குவைத் நாட்டிலிருந்து விமானம் மூலம் அக்டோபர் 7-ம் தேதி வந்த பயணி ஒருவரை சோதனையிட்டதில், 3 கிலோ எடை கொண்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு கிலோ எடை கொண்ட தங்க மோதிரங்களை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. ரூ.11.20 லட்சம் மதிப்புள்ள 255 கிராம் எடை கொண்ட அந்த தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நான்கு சம்பவங்களில் மொத்தம் ரூ.136.92 லட்சம் மதிப்பிலான 3,116 கிராம் எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.