ஜெயலலிதா மரணத்தில் எதையோ அப்பல்லோ மருத்துவமனை மறைக்கிறது – ஆறுமுகசாமி குழு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரித்தது.
ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு தடை கேட்டு அப்பல்லோ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதுவரை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.
அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரம் நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைக்கிறது என சுப்ரீம் கோர்ட்டில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு தடை கேட்டுள்ள அப்போலோ கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் ஆணையம் சரியான முறையில் தான் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைக்கிறது.
அப்பலோ மருத்துவமனை மீது ஏதேனும் தவறு கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்பதால் விசாரணைக்கு தடை கோருகின்றனர். எனவே ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.