டி20 உலக கோப்பை கிரிக்கெட் – முடிவு எடுக்க பிசிசிஐக்கு அவகாசம் வழங்கிய ஐசிசி
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கம் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இதில் பி.சி.சி.ஐ. சார்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி, வருங்கால போட்டி அட்டவணை, அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், 20 ஓவர் உலக கோப்பை போட்டியை கொரோனா அச்சத்துக்கு மத்தியில் இந்தியாவில் நடத்த முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்க வசதியாக ஒரு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஐ.சி.சி. ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இதன்படி 20 ஓவர் உலக கோப்பையை இந்தியாவில் நடத்தலாமா? அல்லது மாற்று நடவடிக்கை மேற்கொள்ளலாமா? என்பது குறித்து தீர்மானிக்க வருகிற 28-ந்தேதி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் பி.சி.சி.ஐ. தெரிவிக்கும் திட்டத்தின்படி 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஐ.சி.சி. தனது இறுதி முடிவை எடுத்து அறிவிக்கும்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவது என்றும், 2024, 2026, 2028, 2030 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கையை 16-ல் இருந்து 20 ஆக உயர்த்துவது என்றும், இதே போல் 2027-ம் ஆண்டு நடக்கும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 14 ஆக உயர்த்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
2024-ம் ஆண்டில் இருந்து 2031-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்குள் டாப்-8 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ்கோப்பை போட்டியை 2 முறையும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றை 4 முறையும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.