டேவிட் வார்னர் நீக்கம் – வருத்தம் தெரிவித்த ஐதராபாத் பயிற்சியாளர்
ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் கேப்டனாக பணியாற்றினார்.
ஐதராபாத் அணி தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. அவரது தலைமையில் இந்த சீசனில் 5 ஆட்டத்தில் தோற்றது. ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
வில்லியம்சன் தலைமையிலும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் தோற்றது. அந்த அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் வார்னர் 11 பேர் கொண்ட அணியிலும் இடம்பெறவில்லை.
இந்தநிலையில் ஐதராபாத் அணி 11 பேர் கொண்ட லெவனில் இருந்து வார்னரை நீக்கியது கடினமான முடிவாகும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் டிரெவர் பயாலிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘வார்னர் ஒரு சிறந்த வீரர். அவரை அணியில் இருந்து நீக்கியது மிகவும் கடினமானது தான். இந்த நீக்கம் ஏமாற்றத்தை தருகிறது. அணியின் நலன் கருதி மாற்று வீரர் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.