டோனி எப்படி தயாராகியிருக்கிறார் என்பதை களத்தில் பார்க்கலாம் – சுரேஷ் ரெய்னா
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கூறியதாவது:-
கொரோனா காரணமாக 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களில் பெரும்பாலானோர் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டோம். இதில் கேப்டன் டோனியும் கலந்து கொண்டார். தொடக்கத்தில் மைதானத்தில் சிறிய அளவில் பயிற்சி எடுத்த டோனி, உடற்பயிற்சி கூடத்தில் கூடுதல் கவனம் செலுத்தினார். அதன் பிறகு களத்திலும் தீவிரம் காட்டினார்.
தினமும் 2 முதல் 4 மணி நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவரது ஷாட்டுகள் மிக நேர்த்தியாக இருந்தது. அவரது உடல்தகுதியும் பிரமாதம். நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி எடுத்தும் அவர் சோர்வடையவில்லை. இந்த முறை அவர் தயாரான விதமே வேறுவிதமாக இருந்தது. பல ஆண்டுகளாக அவருடன் நான் இந்திய அணியிலும், ஐ.பி.எல். அணியிலும் இணைந்து விளையாடி இருக்கிறேன். ஆனால் இந்த முறை எல்லாமே வித்தியாசமாக தெரிந்தது. விரைவில் கிரிக்கெட் போட்டிகளை தொடங்க முடியும் என்று நம்புகிறேன். அதன் பிறகு ஒவ்வொருவரும் டோனி எந்த அளவுக்கு சிறப்பாக தயாராகி இருக்கிறார் என்பதை களத்தில் பார்க்கலாம்.
இவ்வாறு ரெய்னா கூறினார்.