தமிழகத்தில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகள் நிரந்தமாக மூடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ஈரோடு சிறுமி கருமுட்டை விவகாரத்தில் அண்டை மாநிலங்களுக்கும் தொடர்பு உள்ளது. திருப்பதி, திருவனந்தபுரம் மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள் இதற்கு உடந்தையாக இருந்ததாக தெரிய வருகிறது. அதனால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள சிறுமியின் பெற்றோர், தரகரிடம் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சினை முட்டை எடுக்கப்பட்ட சிறுமியின் வயது 16 என்றும் பெயர், வயது மறைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது. ஆதார் அட்டை போலியாக தயாரித்து இடைத்தரகரும், பெற்றோரும் தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
ஈரோடு, சேலத்தில் உள்ள சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம் பிரசாத் மருத்துவமனை, ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனை, திருவனந்தபுரத்தில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனை, திருப்பதியில் உள்ள ஒரு மருத்துவமனை உள்பட 6 தனியார் ஆஸ்பத்திரிகள் ஏ.ஆர்.டி. சட்ட விதிகளை மீறி செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்த மருத்துவமனைகள் வணிக ரீதியாக செயல்பட்டுள்ளது. சினை முட்டை எடுப்பதற்கு முன் அதனை வழங்குபவரின் சாதக, பாதக விவரங்களை கேட்க வேண்டும். சம்பந்தப்பட்ட சிறுமியிடம் முறையாக எதுவும் விளக்கப்படவில்லை. இந்த மருத்துவமனைகள் முறையான ஆவணங்களையும் தரவில்லை.
ஒரே சிறுமியிடம் பலமுறை சினை முட்டை எடுக்கப்பட்டுள்ளது. கணவர் ஒப்புதல் பெறப்படவில்லை. கணவர் ஒருவர் போலியான ஆவணம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளார். சினை முட்டை 21 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்ணிடம் மட்டுமே எடுக்க முடியும். அதுவும் ஒருமுறை மட்டுமே எடுக்க விதிமுறை உள்ளது. ஆனால் எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. மிகப்பெரிய அளவில் தவறு இழைக்கப்பட்டுள்ளது. எனவே முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்படி மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 4 தனியார் ஆஸ்பத்திரிகள் மீது சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி இணை இயக்குனர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வெளியே உள்ள 2 மருத்துவமனைகளின் மாநில அரசுகளுக்கு நடவடிக்கை எடுக்க செயலாளர் பரிந்துரை செய்வார். இந்த மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்கள் சட்டத்தை மீறி செயல்பட்டதால் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு சுதா, ஓசூர் விஜய் மருத்துவமனைகளின் முதல்-அமைச்சர் விரிவான காப்பீட்டு திட்ட அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இன்று முதல் 4 மருத்துவமனைகளில் உள்ள உள் நோயாளிகளை 15 நாட்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய விதிமுறைகளை பின்பற்றி அந்த மருத்துவமனைகளை நிரந்தரமாக மூடுவதற்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.டி. உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சட்ட விதிகளின்படி குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச தண்டனை பெற இணை இயக்குனர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்த நடவடிக்கை மூலம் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தங்கள் கடமையை உணர்ந்து மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மருத்துவ சேவையை வணிக நோக்கமாக கருதாமல் செயல்பட விதிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
பூஸ்டர் தடுப்பூசி நாளை முதல் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்படும். தேவையான அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது. இதற்கான வழி காட்டு நெறிமுறைகள் இன்னும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.