தமிழகத்தில் மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து போக்குவரத்து சேவைகளும் கடந்த மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது பொது போக்குவரத்து சேவை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் ரெயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்ததன் பேரில், 13 கொரோனா கால சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டன.
இதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கி ஒரு சில ரெயில்களை தவிர மற்ற ரெயில்களில் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலுக்கு வந்து விட்டது. இந்த ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன.
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் ரெயில் நிலையங்களில் வழங்கப்படாது. மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் தெற்கு ரெயில்வே வெளியிட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ரெயில் சேவை இன்று தொடங்கியது. 5 மாதங்களுக்கு பிறகு ரெயில் சேவை இன்று தொடங்கியதால் சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயண ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரெயில்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ஒரே ஒரு நுழைவு வாயில் வழியாக உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 6-வது நுழைவு வாயில் வழியாகவும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் மையப்பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாகவும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
பயணிகளின் டிக்கெட்டுகளை ரெயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி டிக்கெட் பரிசோதனை அமைப்பு மூலம் பரிசோதிக்கப்படும். இதேபோல் உடல் வெப்ப பரிசோதனையும், கேமராவில் பொருத்தப்பட்ட தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படும்.
இதேபோல் சென்டிரல் ரெயில் நிலையத்தில் 10 மற்றும் 11-வது நடைமேடைகள் ரெயில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4 மற்றும் 5-வது நடைமேடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு பிறகே ரெயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
ரெயில் நிலையத்துக்கு 90 நிமிடங்களுக்கு (1½ மணி நேரம்) முன்னரே பயணிகள் வர வேண்டும் எனவும், அனைவரும் முக கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும், ஏ.சி பெட்டிகளில் கம்பளி போர்வைகள் எதுவும் வழங்கப்படாது எனவும், பயணிகள் தவிர வேறு யாருக்கும் ரெயில் நிலையத்துக்குள் அனுமதி இல்லை எனவும் தெற்கு ரெயில்வே ஏற்கனவே தெரிவித்துள்ளது.