திமுக பொதுக்குழுவுக்கு 4500 பேருக்கு அழைப்பு – தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்தி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும். அதன்படி தி.மு.க.வில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி தேர்தல் நடந்தது. முதலில் கிளை கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு பேரூர் வாரியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதன்பிறகு நகரம், ஒன்றியம், வட்டம், பகுதி, மாநகரம் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. அதை தொடர்ந்து கடந்த வாரம் மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடந்தது.
தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் 71 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கு தேர்தல் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 71 மாவட்டச் செயலாளர் பதவிக்கு நடந்த தேர்தலில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 7 மாவட்டச் செயலாளர்கள் மட்டும் புதியவர்கள். தி.மு.க.வில் தற்போதுள்ள 71 மாவட்டச் செயலாளர்களில் தூத்துக்குடியை சேர்ந்த அமைச்சர் கீதா ஜீவன் மட்டும் பெண் மாவட்டச் செயலாளர் ஆவார். மற்ற 70 மாவட்டச் செயலாளர்களிலும் ஆண்கள்தான் மாவட்டச் செயலாளராக உள்ளனர்.
இதன் அடுத்த கட்டமாக தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க வருகிற 9-ந்தேதி பொதுக் குழு கூடுகிறது. இந்த பொதுக்குழு கூட்டம் 9-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 7-ந்தேதி அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைக் கழகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.
இந்த பதவிகளுக்கு போட்டியிடுபவர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிய 5 பேர் வழி மொழிய வேண்டும். வேட்பு மனு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் 9-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். தற்போது தி.மு.க. தலைவராக உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவர் பதவிக்கு 2-வது முறையாக போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளார். இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு போட்டியிட உள்ளனர்.
இந்த பதவிகளுக்கு யாரும் எதிர்த்து போட்டியிட மாட்டார்கள் என்பதால் தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் 2-வது முறையாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்கான அறிவிப்பு பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இதேபோல் மற்ற பதவிகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும். அத்துடன் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நியமன பதவிகள் பற்றிய விவரங்களும் அறிவிக்கப்படும். வழக்கமாக பொதுக்குழுவில் 3,500 பேர் வரை பங்கேற்பது வழக்கம். ஆனால் இப்போது 4,500 பேர் வரை பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
இது குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
தி.மு.க.வில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு தலைமை செயற்குழு உறுப்பினர் 2 தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் இவர்களின் எண்ணிக்கை 702 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கு முன்பு இவ்வளவு செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கிடையாது. இப்போதுதான் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இப்போது நடைபெறும் பொதுக்குழுவில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், பேரூர், ஒன்றியம், நகர, மாநகர கழக செயலாளர்கள் பங்கேற்பதால் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்படும். இது தவிர புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, மும்பை, அந்தமான், மாநில நிர்வாகிகளும் பொதுக்குழுவில் பங்கேற்பார்கள்.
இதற்கேற்ப மைதானத்தில் இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொதுக்குழுவை காண்பதற்கு ஏராளமான கட்சி நிர்வாகிகளும் வருவார்கள் என்பதால் அவர்கள் பொதுக்குழுவை காண்பதற்கு வசதியாக பெரிய எல்.இ.டி. ஸ்கிரீன் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்குழுவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் 2-வது முறையாக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர் பொதுக்குழுவில் சிறப்புரையாற்றுவார். அப்போது கட்சி கடந்து வந்த பாதை, நிகழ்கால திட்டம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து மனம் திறந்து பேசுவார். அவரது பேச்சு கட்சித் தொண்டர்களுக்கு ஒரு உத்வேகமாக அமையும்.