திராவிடம் மாடல் என்ற வார்த்தையில் மாடல் என்பதற்கான தமிழ் வார்த்தையை பயன்படுத்தலாமே? – நீதிமன்றம் கேள்வி
ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் அரசாணைப்படி, தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த அரசாணையை பின்பற்றி தமிழில் பெயர் பலகைகள் வைக்கவில்லை. அதை விசாரித்த ஐகோர்ட்டு, அரசாணையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அரசு அலுவலகங்களிலும், தொடர்புடைய அலுவலகங்களிலும் உள்ள பெயர் பலகைகள் அரசாணையின்படி உரிய முறையில் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த அரசாணையை பின்பற்றி தனியார் நிறுவனங்கள், தங்கள் பெயர் பலகையை தமிழ், ஆங்கில மொழிகளில் வைப்பதில்லை. இது சம்பந்தமாக தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் கடுமையாக பாடுபட வேண்டும். குறிப்பாக சட்டக்கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் பாடப்புத்தகங்கள் தமிழில் வழங்க வேண்டும். மேலும், வழக்கு தொடர்பாக குறிப்பு எடுக்க பயன்படும் சட்ட புத்தகங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.
அதன் பின்னர், “தற்போது ‘திராவிட மாடல்’ என்ற சொல் பலதரப்பட்டவர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த திராவிட மாடலில் ‘மாடல்’ என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? அந்த தமிழ் சொல்லை பயன்படுத்தாமல் ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? முற்றிலும் தமிழிலே பயன்படுத்தலாம்” எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
விசாரணை முடிவில், அரசாணையின்படி தமிழ், ஆங்கில மொழிகளில் பெயர் பலகை வைக்காமல், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகைகளை வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கையை தொழிலாளர் நலத்துறை செயலாளர் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி மாதம் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.