Tamilசெய்திகள்

பருத்தி உற்பத்தியில் உலகத் தரத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது – அமைச்சர் பியூஷ் கோயல்

தலைநகர் டெல்லியில் உள்ள வணிக பவனில், பருத்தி உற்பத்தித் திறனை அதிகரித்தல், இந்தியப் பருத்தியின் முத்திரையை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், மத்திய ஜவுளித்துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

பருத்தி உற்பத்தியில் உலகத் தரத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இந்தியாவில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

உற்பத்தித்திறன், விவசாயிகளின் கல்வி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் ஆராய்ச்சியை அதிகரிக்க தனியார் துறை பங்களிக்க வேண்டும். தொழில்துறையினரின் சமமான பங்களிப்பின் மூலம் நல்ல தரமான பருத்தி உற்பத்தியில் உலக அளவில் நாம் முத்திரை பதிக்க வேண்டும்.

நமது பருத்தி விவசாயிகளுக்கு சரியான விதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், நவீன தொழில்நுட்பம் மற்றும் முற்போக்கான விவசாய முறைகளைப் பின்பற்ற விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலமும் மகசூல் மற்றும் லாப வரம்புகளை அதிகரிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பேசிய மத்திய விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், பருத்தி உற்பத்தியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றார். உற்பத்தித்திறனை அதிகரிக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால உத்திகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.