பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் வழங்கிய ஐ.எம்.எஃப்
கடந்த ஜூலை மாதம், பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, வாஷிங்டனை மையமாக கொண்ட ஐஎம்எஃப் (IMF) எனும் சர்வதேச நிதி நாணயம், $1.2 பில்லியன் வழங்கியிருந்தது.
பாகிஸ்தானின் பொருளாதார நிலையை ஆய்வு செய்த ஐஎம்எஃப், தற்போது $700 மில்லியன் நிதியுதவி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம், இது குறித்து முடிவெடுக்கவிருந்த அதன் செயற்குழு சந்திப்பு, தள்ளி போடப்பட்டது. தொடர்ந்து, வரும் ஜனவரி 11 அன்று இது குறித்து ஆலோசிக்க உள்ளது.
பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இவ்வருடம் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள ஆணையம், அதிகரிக்கும் விலைவாசியினால் பொருளாதாரம் நிலையற்றதன்மையை அடைந்திருப்பதாக எச்சரித்துள்ளது. கடந்த 2023 டிசம்பர் 22 காலகட்டத்தில், அந்நாட்டின் மத்திய வங்கியில் டாலர் கையிருப்பு $853 மில்லியன் அளவிற்கு உயர்ந்தது. இது ஐஎம்எஃப் விதித்திருந்த இலக்கை விட பாகிஸ்தான் கரன்சியில் ரூ.43 பில்லியன் அதிகம்.
கடந்த நவம்பர் மாதம், அந்நாட்டு நிதியமைச்சர், “மிக விரைவாக நிதியுதவி தேவைப்படுகிறது” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டே நிதியுதவி வழங்கினாலும், அதற்கு ஈடாக பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இவற்றை கடைபிடித்தாக வேண்டிய கட்டாயத்தால் பாகிஸ்தான் பல இலவசங்களையும், மானியங்களையும் நிறுத்தியுள்ளது.
இதன் விளைவாக பால், உணவு, பெட்ரோல், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு வரலாறு காணாத உயர்வு அங்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சில வாரங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இவையனைத்தும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.