பிரதமர் மோடியின் புகழை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது – பா.ஜ.க குற்றச்சாட்டு
அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டுவதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடந்த 2002-ம் ஆண்டு முதல் மோடியின் புகழைக் கெடுக்க முயன்று வருகின்றனர். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளைப் பொருத்தவரை அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்களில் அதானி குழுமம் முதலீடுகள் செய்துள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் முறையே பூபேஷ் பாகல் மற்றும் அசோக் கெலாட் தலைமையில் அரசுகள் இருந்தபோது ரூ.25 ஆயிரம் கோடி மற்றும் ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆளும் தமிழகத்திலும் முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு திறன் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு 100 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறது. அதானி “ஊழல்” என்றால், காங்கிரஸ் அரசு ஏன் அவரது நிறுவனத்திடம் முதலீடு தேடுகிறது?
மோடி பிரதமராக இருப்பதால், இந்தியப் பொருளாதாரம் வலுவடைவதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது. பிரதமர் மோடியின் புகழை சீர்குலைக்க முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.