Tamilசெய்திகள்

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை எதிரொலி – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கழமை) பகலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். எனவே பாதுகாப்பு கருதி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர குமரி மாவட்ட போலீசார் 1,200 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் மோடி வருகையையொட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன. எந்தவித டிரோன்கள் பறக்கவும் அனுமதி இல்லை. கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுக்கூட்டம் முடியும் வரை கன்னியாகுமரி கடற்கரை, காந்திமண்டபம், சன்செட் பாயிண்ட், கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம், ஹெலிகாப்டர் இறங்குதளம், கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை திறக்கக்கூடாது. அதுமட்டுமின்றி கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று மதியம் 2 மணி வரை மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவைநகர், கோவளம் ஆகிய 7 கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.